
மத்திய அரசு அமைப்பில் நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச் செயலர் பி.முரளிதர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை பி. முரளிதர ராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா போலீஸார் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஃபார்மா எக்ஸில்) தலைவர் பதவிக்கு நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறி, தனது கணவரிடம் ரூ.2.17 கோடி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக பி.முரளிதர ர ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
தங்களை ஏமாற்றுவதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் போல் போலியான கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அந்த 9 பேரும் காட்டியதாக தனது புகார் மனுவில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், பி. முரளிதர ராவ் மற்றும் 8 பேருக்கு எதிராக மோசடி, ஆவணங்களைத் திருத்துதல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
மறுப்பு: தன் மீது கூறப்பட்டுள்ள மோசடி குற்றச்சாட்டை பி.முரளிதர ராவ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) புதிய குற்றச்சாட்டின் அடிப்படையிலானது அல்ல.
இதே விவகாரத்தில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்த புகாரின் தொடர்ச்சியாகவே அந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்தவித முகாந்திரமும் இல்லாத அந்தப் புகாரில் அடங்கியுள்ள பொய்களை போலீஸார் வெளிக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என்று தனது சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தேர்தல் நேரத்தில் பாஜகவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே, கட்சியின் தேசியச் செயலருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...