
பாஜகவுக்கு ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போய்விட்டது. இப்போது, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களை புறக்கணித்துள்ளதால், இனி முதியவர்கள் வாக்கும் பாஜகவுக்கு கிடைக்காது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இளம் தலைவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் நோக்குடன் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பி.சி.கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக அளிக்கவில்லை. இதனைப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் (டுவிட்டர்) ஹிந்தியில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜகவின் கலாசாரம் உயர்ந்த இடத்துக்கு சென்றுள்ளது. மூத்த தலைவர்களைக் கட்சியில் இருந்து முழுமையாகப் புறக்கணிக்கும் முடிவை பாஜக எடுத்துள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் பாசாங்குத்தனம் வெளிப்பட்டுள்ளது. பேசுவது ஒன்று நடப்பது ஒன்று என்ற முரண்பாடு வெளிப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு ஏற்கெனவே இளைஞர் மத்தியில் செல்வாக்கு முற்றிலும் சரிந்துவிட்டது. இப்போது மூத்த தலைவர்களைப் புறக்கணித்துள்ளதன் மூலம் முதியவர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு கிடைக்காது என்று கூறியுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...