
தலைமறைவு நிதி மோசடியாளரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக யுனைடெட் பிரிவெரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் (யுபிஹெச்எல்) இருந்த சுமார் 74 லட்சம் பங்குகள், ரூ.1,008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
மல்லையாவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டிருந்த சுமார் 74 லட்சம் பங்குகள் யெஸ் வங்கி வசம் இருந்தன.
அந்தப் பங்குகளை, பெங்களூரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கடன் வசூல் தீர்ப்பாயத்தின் பெயரில் ஒப்படைக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்பேரில், யுபிஹெச்எல் நிறுவனத்தின் 74,04,932 பங்குகளை விற்பனை செய்வதற்கான பொது அறிவிப்பை கடன் வசூல் தீர்ப்பாயத்தின் அதிகாரி மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனிடையே, அமலாக்கத் துறை முன்வைத்த வாதத்தின் அடிப்படையிலும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் மல்லையா பாரத ஸ்டேட் வங்கியின் கூட்டமைப்புக்கு வைத்துள்ள மிக அதிக அளவிலான கடன் பாக்கியை கருத்தில் கொண்டும் அந்தப் பங்குகளை விற்பனை செய்ய நிதி மோசடி தடுப்புச் சட்ட நீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி அனுமதி அளித்தது.
அதன்பேரில் மல்லையாவுக்குச் சொந்தமான சுமார் 74 லட்சம் பங்குகளை கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரி புதன்கிழமை விற்பனை செய்ததில் ரூ.1,008 கோடி ஈட்டப்பட்டது. மல்லையாவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் இவ்வாறு பங்குகள் விற்பனை செய்யப்படுவது இது முதல் முறையாகும். இனி வரும் நாள்களில் மேலும் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
முன்னதாக, இந்தப் பங்குகளானது, யெஸ் வங்கியில் கிங்ஃபிஷர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த கடனுக்காக அந்த வங்கியில் பிணையாக இருந்தது. இந்நிலையில், பங்குகள் விற்பனை மூலம் கிடைத்த தொகையிலிருந்து யெஸ் வங்கியின் கடனில் பெரும்பகுதி அடைக்கப்பட்டுவிட்டது. பெயரளவில் எஞ்சியிருக்கும் சில பங்குகள் யெஸ் வங்கியின் பெயரிலான உத்தரவாதத்தில் இருக்கின்றன என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர்.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொண்டுள்ள மல்லையா அந்தப் பங்குகளை விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலும், பிற்காலத்தில் தேவையேற்படும்போது அரசு அமைப்புகள் அதை விற்பனை செய்யும் வகையிலும் அமலாக்கத் துறை அவற்றை முடக்கியிருந்தது.
ரூ.9,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
தற்போது லண்டனில் தங்கியுள்ள அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் அவை மேற்கொண்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...