தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட 'தடா' 

கலவர வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தண்டனையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம்: ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட 'தடா' 

அகமதாபாத்: கலவர வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஹர்திக் பட்டேல் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 'பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி' என்ற இயக்கத்தை நடத்தி வந்த ஹர்திக் பட்டேல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

முன்னதாக பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய கலவரம் வெடித்தது. அது தொடர்பான வழக்கில் ஹர்திக் பட்டேலுக்கு விசாரணை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு வந்த  ஹர்திக் பட்டேல், கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என பேசப்பட்டது. எனவே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் பட்டேல் தனியாக வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து குஜராத்தை ஆளும் பாஜக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஹர்திக் பட்டேலின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஹர்திக் பட்டேல் நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com