
மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கொண்டுவரும் தேர்தல் அறிக்கை மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, தேசிய அளவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்களுடன் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. எங்களது தேர்தல் அறிக்கை மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருக்கும்.
அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேளாண் துறையை வளர்ச்சி அடையச் செய்வதற்கான செயல்திட்டம், சிறுதொழில்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அடிப்படையாகக் கொண்டிருக்கும். தொழில்முனைவோரையும், தொழில்துறையையும் ஊக்குவிப்பதுடன், வரி நெருக்கடியிலிருந்து தொழில் நிறுவனங்களுக்கு விடுதலை அளிக்கப்படும். சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நியாயமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அதிகார பரவலாக்கம்: காங்கிரஸ் கட்சி, அனைவரும் கருத்து தெரிவிக்க அனுமதிக்கும் ஓர் அமைப்பாகும். அனைவரிடமும் கலந்துரையாடி கருத்துகளை கேட்கவே காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் போன்று மக்கள் மீது தங்களது கருத்தை திணிக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்கும் நியாய் திட்டம் நான் முன்மொழிந்ததல்ல. அது, லட்சக் கணக்கான மக்கள் பிரதிபலித்த கருத்தாகும்.
விவசாயிகள் பலர் எங்களை அணுகி, தங்களது விளை நிலம் அருகே உணவுப் பதப்படுத்துதல் அமைப்பை ஏற்படுத்தித் தரவும், தொழிற்சாலைகள் அமைக்கவும் கோரிக்கை வைத்தனர். அது நல்லதொரு யோசனையாகும். அதை நாங்கள் செயல்படுத்துவோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...