
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில் கேரள அரசு நடந்து கொண்ட விதம், பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான கும்மனம் ராஜசேகரன்(66) தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10-50 வயதுடைய பெண்களுக்கு அனுமதியில்லை என்ற நடைமுறையை தவிர்த்து, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை செயல்படுத்துவது மாநில அரசின் கடமை என்று கூறி பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்குள் அனுமதிக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு முயற்சி செய்தது. அதனால் மாநிலம் முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பல ஹிந்து அமைப்புகள்
போராட்டங்களில் ஈடுபட்டன.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில், இந்த விவகாரம் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்று அக்கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளர்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
சபரிமலை கோயிலின் பாரம்பரிய கலாசாரத்தை காக்க வேண்டும் என்று கேரளத்தின் அனைத்துப் பகுதி மக்களும் விரும்பினர். அவர்களின் உணர்வுகளை மாநிலத்தில் ஆளும் இடதுசாரி அரசு புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பாஜக, சபரிமலை பாரம்பரியத்தை காப்பதற்காக கடுமையாக போராடியது. பாஜகவால் மட்டுமே கேரளத்தின் பாரம்பரியத்தை காப்பாற்ற முடியும் என்று மக்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
கேரளத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இப்போதைய இடதுசாரி முன்னணி ஆகிய அரசுகளின் தோல்விகளால் மக்கள் பல பிரச்னைகளை சந்தித்துள்ளனர். இந்த அரசுகளால் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அந்த கட்சிகள் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சபரிமலை விவகாரத்தில் பாஜக போராடிய விதம், கேரள அரசு நடந்து கொண்ட விதம் ஆகியவை எங்களுக்கு சாதகமாக அமையும்.
கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 6,000 கோடியை கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் தரமான சாலை வசதி கூட இல்லை. எந்த வளர்ச்சி திட்டத்தையும் கேரள அரசு செயல்படுத்தவில்லை. திருவனந்தபுரத்தில் 10 ஆண்டுகளாக சசி தரூர் எம்.பி.யாக இருக்கிறார். ஆனால் தொகுதி மக்களை சந்தித்து, அவர்களது பிரச்னை என்ன என்றுகூட கேட்டதில்லை. அதனால் இந்த தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரை எதிர்த்து, பாஜக சார்பில் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். அவர், கடந்த 2015-2018 ஆம் ஆண்டுகளில் பாஜகவின் மாநில தலைவராக பதவி வகித்தவர். அவர் மாநில தலைவராக இருந்த காலத்தில்தான் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. மிúஸாரம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...