
வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்; 300-க்கும் அதிகமான தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதென மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக கூறியதாவது:
2014 மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அதிகரித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மாறாக, இப்போதுதான் எதிர்க்கட்சிகள் சிதறுண்டுள்ளன. ஆந்திரம், மேற்கு வங்கம், ஒடிஸா, கேரளம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகளிடையே ஏதேனும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதா?
தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் கைகோக்கவும் வாய்ப்பில்லை. இன்றைய சூழலில், எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் கீழிறக்குவதில் போட்டிபோட்டு செயல்படுகின்றன. இதனை, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமன்றி, பாஜகவுக்கு ஆதரவாகவே நாட்டு மக்களின் மனநிலை உள்ளது. என்னை தவிர வேறு முகத்தை மக்கள் தேட மாட்டார்கள். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எந்த சந்தேகமும் இல்லை. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் கூடிய அரசை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். 300-க்கும் அதிகமான இடங்களை, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர் என்றார் மோடி.
வரும் மக்களவைத் தேர்தலில், மோடிக்கு யார் போட்டி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய தேர்தலில் அதற்கான வாய்ப்பு இல்லை. இந்த கேள்வி 2024-இல் வேண்டுமானால் எழலாம் என்றார்.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை விவகாரம்: செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நேரத்தில் இச்சோதனையை நடத்த வேண்டிய தேவை என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:
இதுபோன்ற சோதனைகளை உடனடியாக நடத்தி விட முடியாது. அது நீண்ட கால நடைமுறையாகும். முதலில் சோதனை மேற்கொள்வது தொடர்பாக உலக நாடுகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு, விண்வெளியில் வேறு நாடுகளின் செயல்பாடு எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே சோதனை நடத்த முடியும் என்றார் அவர்.
முத்ரா திட்டத்தில் 4 கோடி பேருக்கு கடன்: மத்திய பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமர் மோடி அளித்த பதில் வருமாறு:
நாட்டில் சிறப்பான நிர்வாக நடைமுறையை ஏற்படுத்தியிருக்கிறோம். முத்ரா வங்கிக் கடன் திட்டத்தின் மூலம் 4 கோடி பேர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் தொழில் தொடங்கியிருப்பார்கள். மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்திருப்பார்கள் அல்லவா?
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்திலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால், அவரது ஆட்சி காலத்தில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வெறும் 1.5 கோடி வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டன.
கடந்த ஆட்சிகளைவிட தற்போதைய ஆட்சியில்தான் அதிக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையும் இருமடங்கு வளர்ந்துள்ளது. இதற்கெல்லாம் மனித வளம் தேவைப்பட்டிருக்காதா? எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றார் மோடி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...