
பயங்கரவாதத்துக்கு நிதி அளித்தது தொடர்பான வழக்கில், ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சபீர் ஷாவின் சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பிரிவினைவாதத் தலைவர்களுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீநகரின் ராவல்போரா பகுதியில் உள்ள சபீர் ஷாவுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துகளை, நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சபீர் ஷா, தனது கூட்டாளி முகமது அஸ்லாம் வாணியுடன் இணைந்து, பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். பாகிஸ்தானில் இருந்து ஹவாலா பணத்தைக் கடத்தி வருவதில் அவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது, சபீர் ஷா நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சபீர் ஷாவின் மனைவி மற்றும் மகள்களின் பெயரில், ஸ்ரீநகரில் இருந்த சொத்து பெறப்பட்ட விதம் குறித்து, அவர்களிடம் பல முறை விளக்கம் கோரினோம். ஆனால், அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. பின்னர், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சபீர் ஷாவே இந்தச் சொத்தை வாங்கியதும், அதற்கான நிதி ஆதாரங்களைச் சட்டவிரோதமாக அவர் பெற்றதும் தெரிய வந்தது.
சர்வதேச பயங்கரவாதியான ஹபீஸ் சயீது, ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் உள்ளிட்டோரிடம் இருந்து சட்டவிரோத முறையில் பணத்தைப் பெற்று, அதனை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சபீர் ஷா பயன்படுத்தியுள்ளார். மேலும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு சொத்துகளையும் அவர் வாங்கியுள்ளார்.
தற்போது, ஸ்ரீநகரில் உள்ள சபீர் ஷாவுக்குச் சொந்தமான சொத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ.25.8 லட்சம் ஆகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...