
பிரதமர் நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களுக்கு நெருங்கிய நண்பர்; ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாகப் போராடும் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஹரியாணாவின் யமுனைநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல், இரு கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாகும். ஒன்று பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கை மற்றொன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இந்த இரு தரப்புக்கும் கொள்கைகளில் பல முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பாஜக, பெரும் பணக்காரர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் ஆதரவாகச் செயல்படக் கூடிய கட்சி. அதே நேரத்தில் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளின் நலன்களைப் பிரதானமாகக் கருதும் கட்சி காங்கிரஸ். பிரதமர் மோடி நமது நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு நண்பராகச் செயல்படக் கூடியவர். ஆனால், நாங்கள் ஏழை மக்களின் பிரதிநிதிகள்.
நாட்டில் உள்ள 15 பெரும் தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி கடனை மோடி தள்ளுபடி செய்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஏழை, எளிய விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தது.
நாங்கள் மக்கள் மத்தியில் அன்பையும், சமாதானத்தையும் பரப்புகிறோம். அதே நேரத்தில், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்தை மட்டுமே பிரதமர் மோடி மேற்கொள்கிறார். நாங்கள் ஆட்சி அமைத்தால், வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு, நாட்டு மக்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவேன் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், இப்போது வரை வங்கிக் கணக்கில் எதுவும் வரவில்லை.
பாஜக எப்போதும் வெற்றுவாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சி நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும். காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் திட்டத்தை நிச்சயமாக அமல்படுத்துவோம் என்றார் ராகுல் காந்தி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...