
வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் விஷயத்தில் தற்போது கடைப்பிடிக்கும் முறையே மிகச் சிறந்ததாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், அந்தச் சின்னத்துடன் அச்சாகி வரும் வாக்கு ஒப்புகைச்சீட்டு 7 விநாடிகளுக்கு காட்சியளித்த பிறகு தானாகே பெட்டிக்குள் விழுந்துவிடும். தேர்தலில் நம்பகத்தன்மையை கடைப்பிடிப்பதற்காக, தற்போது சோதனை முறையில் சட்டப்பேரவை தொகுதி ஒன்றுக்கு, ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் சேகரிக்கப்பட்ட வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் முறையை தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
அதுவே மக்களவைத் தேர்தல் எனில், அந்தத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்தும் தலா ஒரு வாக்குச்சாவடியில் சேகரிக்கப்பட்ட வாக்கு ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் முறை பின்பற்றப்படுகிறது.
ஆனால், குறைந்தபட்சம் 50 சதவீத வாக்கு ஒப்புகைச்சீட்டுகளையாவது எண்ணுவதை, தற்போதைய மக்களவைத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நாடெங்கிலும் உள்ள 21 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீது, உச்சநீதிமன்றத்தில் கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஒப்புகைச்சீட்டு எண்ணப்படும் வாக்குச்சாவடிகளை மேலும் அதிகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டால் அவை பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தற்போது நெருங்கி வரும் தேர்தல் தொடர்பாக மனுதாரர்கள் தெரிவித்திருக்கும் சிக்கல்கள் யாவும், தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே ஆராயப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டவையாகும். ஆகவே, தற்போது நடைபெறவுள்ள தேர்தலிலும் இதுவரை கடைப்பிடிக்கப்படும் முறையை பின்பற்றுவதே சிறப்பானதாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய முறைக்கு மாற்றான யோசனை அல்லது கட்டமைப்பு முறையை மனுதாரர்கள் சுட்டிக்காட்டவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...