
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி, இடதுசாரிகள் ஆகியவை அணிகளாகப் போட்டியிடுகின்றன. இது தவிர பல்வேறு மாநிலக் கட்சிகள் தனியாகவும், சில தேசியக் கட்சிகளுடன் அணிசேர்ந்தும் போட்டியிடுகின்றன. வழக்கம் போல் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். மத்தியில் ஆட்சியைப் பிடிக்கத் தேவையான பெரும்பான்மை என்பது 272 இடங்களாகும்.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மத்தியில் உருவாகக் கூடிய சூழல்கள் என்னென்ன? அதைத் தொடர்ந்து புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான விஷயத்தில் மாநிலக் கட்சிகள் ஆற்றப் போகும் பங்கு என்ன?
சூழல் -1
மீண்டும் மோடி ஆட்சி
இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் 272 இடங்கள் கிடைத்தாலோ, அல்லது அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த இடங்கள் கிடைத்தாலோ நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு ஏற்படும்.
அவரது அமைச்சரவையில் பாஜக தவிர வழக்கம் போல் சிவசேனை, அகாலி தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இடம்பெறக் கூடும். தவிர பாஜகவின் புதிய கூட்டணிக் கட்சிகளான அதிமுக, ஐக்கிய ஜனதாதளம் போன்றவையும் ஆட்சியில் பங்கு பெறலாம். பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுக்கு எம்.பி.க்கள் இருந்தால் அவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
கடந்த 2014-இல் பாஜகவுக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் 282 இடங்கள் கிடைத்தன. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது அப்போதுதான். அதற்கு முன்பு, 1984-இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 404 இடங்களுடன் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. அப்போது ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார்.
அதன் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் அமைந்த ஆட்சிகளில் எந்தக் கட்சியும் 272 என்ற இலக்கை எட்டவில்லை. வாஜ்பாய் 1996, 1998, 1999 என்று மூன்று முறை பிரதமராகப் பதவியேற்றபோதிலும் பாஜகவால் தனிப்பட்ட முறையில் அறுதிப் பெரும்பான்மையை எட்ட இயலவில்லை. 1996-இல் 161, 1998 -இல் 181, 1992-இல் 182 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருந்தது. எனினும், அவரது தலைமையிலான கூட்டணியின் பெரும்பான்மை பலத்துடனே அவர் ஆட்சி நடத்தினார்.
அதேபோல், வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் என, அக்காலகட்டத்தில் ஆட்சி நடத்திய பிரதமர்கள் சார்ந்திருந்த கட்சிக்குத் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை என்பதே உண்மை.
மன்மோகன் சிங் தலைமையிலான பத்து ஆண்டு கால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மற்றும் நிர்வாகக் கோளாறுகள் போன்றவையே பாஜகவின் அமோக வெற்றிக்கு காரணமாக அமைந்தன. 2014-இல் தனியாகவே ஆட்சி அமைத்திருக்க முடியும் என்றபோதிலும், தேர்தலுக்கு முன் தன்னுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறச் செய்தது.
இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மீண்டும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் வாய்ப்பு தோன்றினால் நரேந்திர மோடி பிரதமராவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. பாஜகவின் தமிழக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆகும் பட்சத்தில் அமைச்சரவையில் அவர்கள் இடம்பெறலாம்.
சூழல் -2
பாஜக தலைமையிலான ஆட்சி
பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போகும் நிலை இது. அவ்வாறு நடக்க நிறைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது கடந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த 282 இடங்களைவிட 80 முதல் 100 இடங்களை அக்கட்சி இம்முறை இழக்க நேரலாம் என்பது அவர்களின் கணிப்பாகும். இந்தக் கணிப்பை அரசியல் விமர்சகர்கள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
பாஜக கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைக் காட்டிலும் இம்முறை சற்றேறக்குறைய 100 இடங்களை இழக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அது பாஜகவின் தனி அதிகார ஆட்சியாக இல்லாமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இப்போது மோடி தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் என்றாலும் இந்த ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த செல்வாக்கும் இல்லாமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையேயே அவர் இவ்வாறு சூசகமாகக் கூறியிருந்தார்.
பாஜக கடந்த தேர்தலைவிட இம்முறை கணிசமான இடங்களை இழக்கும் என்ற கருத்தை மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் அண்மையில் தெரிவித்திருந்தார். அதாவது இந்த வாதத்தை முன்வைப்பவர்களின் அடிப்படைக் கருத்தாக, பாஜக தனிப்பெரும் கட்சியாகவும், அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும் அணியாகவும் வந்துவிடும் என்பதாக உள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக போட்டியிட்டது. எனினும், அப்போது பாஜவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று சுமார் 170 முதல் 180 இடங்கள் வரை கிடைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கருதுவதாகவும் பேசப்பட்டது. அந்தச் சூழலில் பாஜக கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவு ஆட்சியமைக்கத் தேவைப்படும் என்றும் அக்கட்சிகள் மோடியை பிரதமராக ஏற்காது என்றும் இந்தத் தலைவர்கள் நம்புவதாகவும் பேச்சு அடிபட்டது. அப்படிப்பட்ட சூழலில் தங்களுக்கு பிரதமராகும் வாய்ப்பு தேடி வரும் என்று அத்தலைவர்கள் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதின. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. சுமார் 170 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கணிப்பதாக கூறப்பட்டதால், இந்தத் தலைவர்களை "175 கிளப்' என்று தில்லி வட்டாரங்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டன.
அதேபோல், இந்த முறையும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு 220 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று அக்கட்சித் தலைவர்கள் சிலர் கருதுவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்றோர் இருப்பதாகவும், அவர்களும் பிரதமர் கனவில் இருப்பதாகவும் ஹேஷ்யங்கள் உலவுகின்றன. எனினும், தாம் 220 கிளப்பில் இல்லை என்றும் பிரதமர் பதவிக்காக கனவு காணவில்லை என்று கட்கரி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் வெளிப்படையாக இவ்வாறு கூறியிருந்தாலும் அவரது உண்மையான கணக்கு என்ன என்பது மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெரிய வரும்.
பாஜக கூட்டணிக்கு சுமார் 225 இடங்களுக்கு மேல் கிடைத்துவிட்டால், அதன் பிறகு பெரும்பான்மைக்குத் தேவைப்படும் ஏறக்குறைய 50 எம்.பி.க்களின் ஆதரவை மோடி-அமித் ஷா ஜோடி எளிதாகத் திரட்டி விடும் வாய்ப்பு உள்ளது. மாறாக, பாஜக கூட்டணிக்கு 200 முதல் 220 இடங்கள் மட்டுமே கிடைத்தால் ஆட்சியமைக்க கூடுதல் எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும். அப்படி ஒரு சூழல் வந்தால், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பாஜக அரசை ஆதரிக்க முன்வந்தாலும் பல்வேறு நிபந்தனைகளை விதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடுமையான போக்கைக் கொண்டிருக்கும் மோடிக்குப் பதிலாக பாஜகவில் மிதவாதத் தலைவர்களாக அறியப்படும் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் போன்ற ஒருவரைப் பிரதமராக தேர்வு செய்தால்தான் ஆதரவு தர முடியும் என்று அவர்கள் தெரிவிக்கக் கூடும். குறிப்பாக, மோடிக்கு இரண்டாவது முறை பிரதமர் பதவிக்கு வருவதற்கான தகுதி இல்லை என்று நவீன் பட்நாடக் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணிக்கு 200 முதல் 215 இடங்களே கிடைக்கும்பட்சத்தில் அக்கட்சியின் சில தலைவர்களே கூட மோடி மீண்டும் பிரதமராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் வியப்பதற்கில்லை. "கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என்றால் கட்சி தோல்வி அடைந்ததாகவே அர்த்தம். எனவே, தோல்விக்கு மோடியும், அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும். புதிய பிரதமர் பொறுப்பேற்கவும், பாஜகவுக்கு புதிய தலைவர் பொறுப்பேற்கவும் அவர்கள் வழிவிட வேண்டும்' என்று அவர்கள் போர்க்கொடி தூக்கவும் வாய்ப்புள்ளது.
இது தவிர, பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்காத பட்சத்தில் அதன் கூட்டணியில் உள்ள சிவசேனை கூட மோடி மீண்டும் பிரதமராக எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சிவசேனையைப் பொருத்தவரை பிரதமர் பதவியோ, மத்திய ஆட்சியோ இலக்கு அல்ல. மகாராஷ்டிர முதல்வர் பதவியும், அந்த மாநில அரசியலில் தனக்கு முதன்மை ஸ்தானமும் மட்டுமே அக்கட்சிக்கு முக்கியமானவை. எனவே, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில மாதங்களில் வரக் கூடிய மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே சிவசேனை தனது அரசியல் காய்களை நகர்த்தும்.
எனவே, அத்தேர்தலில் பாஜகவுடன் சட்டப் பேரவைத் தொகுதிகளில் சரிபாதி இடங்களைப் பகிர்ந்துகொண்டு போட்டியிட சிவசேனை முன்வந்தாலும் முதல்வர் பதவி தங்களுக்கே தரப்பட வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாக இருக்கக் கூடும். தவிர, தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சி அதிக இடங்களில் வென்றாலும் அதைப் பொருட்படுத்தாமல் தனக்கே முதல்வர் பதவி என்ற நிபந்தனையையும் சிவசேனை முன்வைக்கும். ஏனெனில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் இந்த நிபந்தனைகளை அக்கட்சி பிடிவாதமாக முன்வைத்தபோது மோடியும், அமித் ஷாவும் அதை ஏற்காததால் கூட்டணி முறிந்தது. எனவே, தனது நிபந்தனைகளை ஏற்கக் கூடிய கட்கரி போன்ற மிதவாதத் தலைவர் பிரதமர் பதவிக்கு வருதையும், அமித் ஷா போன்ற தீவிர போக்கு இல்லாத ஒருவர் பாஜக தலைவராக வருவதையும்தான் சிவசேனை விரும்பும்.
அப்படி ஒரு சூழல் வரும்போது, நிபந்தனைகளை ஏற்று புதிய பிரதமரைத் தேர்வு செய்யும் நிலைக்கு பாஜக தள்ளப்படலாம். இல்லாவிட்டால், காங்கிரஸ் தலையிலான அணியிடமோ, மூன்றாவது அணியிடமோ ஆட்சியை இழக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டு விடும். ஏற்கெனவே கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியில் அமர்ந்தும், அதில் பாஜகவால் நீடிக்க முடியவில்லை. அந்த அனுபவம் தந்த பாடத்தை அக்கட்சி மறந்திருக்காது என்பதால் மோடிக்குப் பதிலாக புதிய தலைவரை பிரதமராக்கும் முடிவுக்கு வர நேரிடலாம். அந்தச் சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு பிரதமராகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு ஆதரவு உள்ளது என்பதோடு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும் நல்ல நட்பைப் பேணி வந்துள்ளவர் அவர் என்பதால், பாஜக கூட்டணியில் இல்லாத மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கூட ஆதரவு தர முன்வரலாம். அவரைத் தவிர, ராஜ்நாத் சிங் போன்ற பாஜக மூத்த தலைவர்களின் பெயர்களும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்படலாம்.
சூழல் - 3
காங்கிரஸ் தலைமையிலான அரசு
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அல்லது அதன் கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் பட்சத்தில் இது நடக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 272 இடங்கள் கிடைத்துவிட்டால் ராகுல்தான் பிரதமர் என்பதில் சந்தேகமே இருக்காது. அந்த ஆட்சியில் இயல்பாகவே காங்கிரஸ் தலைவர்களைத் தவிர, கூட்டணிக் கட்சிகளான திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள். ஒருவேளை, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் தனிப்பெரும் அணியாக வந்தால், அப்போது ராகுல் பிரதமர் பதவியே ஏற்க சம்மதிப்பாரா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் ஒரு சிறுபான்மை அரசை நடத்தியபோது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த நெருக்கடிகளை ராகுல் நேரடியாக அறிந்திருப்பார். எனவே, அப்படி ஒரு சூழல் வந்தால், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங் போன்ற ஒருவரை பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்துவிட்டு, ஆட்சியின் லகானை தன் கையில் வைத்திருப்பதே புத்திசாலித்தனம் என்று ராகுல் காந்தி கருத வாய்ப்புள்ளது.
சூழல் - 4
மூன்றாவது அணியின் ஆட்சி
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், அக்கட்சி ஆட்சியமைக்க பிற கட்சிகள் ஆதரவு தர மறுத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 150 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை என்ற நிலை உருவானால் மூன்றாவது அணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் 1996-இல் தேவே கௌடா தலைமையில் மாநிலக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முன்னணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைப் போன்ற காட்சி மீண்டும் அரங்கேறும்.
தற்போதைய சூழலில் மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டாட்சி முன்னணி என்ற அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விரும்புகிறார். அந்தக் கூட்டணியால்தான் மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று அவர் கூறி வருகிறார். அவரது தலைமையிலோ அல்லது வேறு ஒரு மாநிலக் கட்சியின் தலைமையிலோ இந்த அணி உருவாகலாம். உண்மையில் அப்படிப்பட்ட அணி ஒன்றில் தாம் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் விரும்புவது தனிக்கதை.
கூட்டாட்சி முன்னணி அல்லது வேறு எந்தப் பெயரில் ஒரு மூன்றாவது அணி அமைந்தாலும், காங்கிரஸ் அல்லது பாஜக ஆதரவின்றி அந்த அணியால் ஆட்சியமைக்க முடியாது. அந்த அணியில் சரத் பவார், சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி, நவீன் பட்நாயக் ஆகியோரின் கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்கும் நோக்கில், மூன்றாவது அணிக்கு ஆதரவு தர காங்கிரஸ் முன்வரக் கூடும். எனினும், அந்த அணி நீண்ட காலம் ஆட்சிபுரிய விடாமல் ஓரிரண்டு ஆண்டுகளில் கவிழ்த்து விட்டு, தனிப் பெரும்பான்மையுடன் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே காங்கிரஸின் வியூகமாக இருக்கும்.
எனினும், மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், இந்த அணியில் இடம்பெறக் கூடிய மேற்கண்ட தலைவர்களில் ஒருவர் பிரதமர் பதவிக்கு வர வாய்ப்புள்ளது. அதிக எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகியோருக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாகக் கருதலாம். மாயாவதி பிரதமராக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி முழு ஆதரவை அளிக்கும் என்று நம்பலாம். ஏனெனில், அகிலேஷுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் பதவிதான் இலக்கு என்பதால் மாயாவதி பிரதமராகி விட்டால் தனக்கு மாநிலத்தில் ரூட் கிளியராகி விடும் என்று அவர் கணக்கு போடலாம்.
மூன்றாவது அணி ஆட்சி அமைந்தால் அதில் திமுக போன்ற காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் பங்கேற்க வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டையே எடுக்கும். இந்த நான்கு சூழல்களில் எந்தச் சூழல் உருவாகும் என்பதை இம்மாதம் 23-ஆம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.
"கருப்புக் குதிரை'
குதிரைப் பந்தயத்தில் யாரும் எதிர்பாராத "கருப்புக் குதிரைக்கு' வெற்றி வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடுவது வழக்கம். அதுபோல, பிரதமர் போட்டியில் கருப்புக் குதிரையாக ஒருவர் உண்டு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ்குமார்தான் அவர்.
அவரது பெயரும் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது. அவருக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் உள்ளதாகவும், இதனாலேயே கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அப்போது வெளியேறியதாகவும் பேச்சு அடிபட்டது.
எனினும், பின்னர் ஏற்பட்ட மாநில அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து நிதீஷ்குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்தார். தற்போது பிகாரில் ஆட்சியில் தொடர்ந்து வருகிறார். அவருக்கும், மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்குமான உறவு சுமுகமாக உள்ளது. எனவே, மோடி அல்லாத ஒருவரைத் தேர்வு செய்தே தீர வேண்டும்- அந்த ஒருவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், நிதீஷ்குமாரை பிரதமராக பாஜக தேர்வு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
- சி.விஜயசேகர்