மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நக்ஸலைட் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட 41 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்களை நக்ஸலைட்டுகள் கடந்த புதன்கிழமை தீயிட்டு கொளுத்தினர்.
இதுகுறித்த தகவலின்பேரில், அப்பகுதிக்கு மாவட்ட அதிரடிப்படை போலீஸார் சென்றபோது, அவர்களின் வாகனத்தை குறிவைத்து நக்ஸலைட்டுகள் கண்ணிவெடி மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த வாகனம் சுக்குநூறாக சிதறியது. அந்த வாகனத்தில் இருந்த 15 அதிரடிப்படை போலீஸார், ஓட்டுநர் என மொத்தம் 16 பேர் பலியாகினர்.
கட்சிரோலியில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்களுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸலைட் அமைப்புத் தலைவர் பாஸ்கர் ஹிக்கானியின் மனைவி ராம்கோ என்ற கமலா மங்கு நரோட் (46) சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.16 லட்சம் வெகுமதியாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், துப்பாக்கிச் சண்டையில் கமலா சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையிலேயே, கட்சிரோலியில் கண்ணிவெடி மூலம் தாக்குதல் நடத்தி 16 பேரை நக்ஸலைட்டுகள் கொன்றதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புருடா காவல் நிலையத்தில் நக்ஸலைட் அமைப்புத் தலைவர் பாஸ்கர் ஹிக்கானி மற்றும் 40 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.