
சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பது தொடர்பாக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம், தனது 2 நாள் விசாரணையை நிறைவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய விசாரணை சனிக்கிழமை நிறைவு பெற்றது.
சிமி அமைப்பு, கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறி, கடந்த 2001ஆம் ஆண்டில் மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், 5 ஆண்டு தடைக்காலம் கடந்த ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
அந்த அமைப்பின் விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியிட்டது.
புணேயில் நடைபெற்ற 2 நாள் விசாரணையில், மகாராஷ்டிர மாநில குற்றப் புலனாய்வு துறை, மாநில பயங்கரவாத தடுப்புபிரிவு மற்றும் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஆஜராகி சிமி அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தீர்ப்பாயத்தில் இடம்பெற்றுள்ள கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கூறுகையில், "அடுத்தகட்ட விசாரணை ஹைதராபாதில் நடைபெறவுள்ளது. பின்னர், மீண்டும் மகாராஷ்டிரம் திரும்புவோம். ஒளரங்காபாதிலும் விசாரணை நடைபெறவுள்ளது' என்றார்.