பயங்கரவாதிகள் மீது மத்திய பாஜக அரசு நடத்திய துல்லியத் தாக்குதலை விமர்சித்த காங்கிரஸ், தற்போது தங்கள் ஆட்சியிலும் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விமர்சித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த விஜய் ரூபானி கூறியதாவது:
உரி மற்றும் புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, அவர்களுக்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியது. அப்போது, அவற்றுக்கு காங்கிரஸ் ஆதாரம் கேட்டது. ஆனால், தற்போது தங்கள் ஆட்சிக் காலத்திலும் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கூறுகிறது.
பாஜக அரசு நடத்திய துல்லியத் தாக்குலுக்கு மக்கள் அளித்த ஆதரவைக் கண்டு, தற்போது தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் மாற்றிக் கொண்டுள்ளது. இதன் மூலம், துல்லியத் தாக்குதல் நடந்தது உண்மை என்பதை காங்கிரúஸ ஒப்புக்கொண்டுவிட்டது. உண்மையில் "துல்லியத் தாக்குதல்' என்ற வார்த்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் காரணமாகவே மக்களிடையே பிரபலமானது. அதற்கு முன் அந்த வார்த்தையை மக்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தையும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களையும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றபோது, காங்கிரஸ் இக்குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. தோல்வி ஏற்படும்போது மட்டும், வாக்குப் பதிவு இயந்திரங்களைக் குறை கூறுவது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது.
காங்கிரஸ் முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டது. மிகக் குறைவான தொகுதிகளையே அக்கட்சி கைப்பற்றும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா, பாம்புகளுடன் விளையாடி வருகிறார். இது குழந்தைத்தனமாக உள்ளது. ராகுலும், பிரியங்காவும் சமூக வலைதளங்களில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களாக மாறிவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.