
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 6 முறை துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக முன்னாள் ராணுவத் தளபதிகள் 2 பேர் தெரிவித்திருப்பதை பாஜக பொய் என கூறுகிறதா என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கடந்த வியாழக்கிழமை அளித்த பேட்டியில், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்திலும் 6 முறை துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக, மோடி அரசால் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் காங்கிரஸ், தமது ஆட்சியில் 6 தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது என்று விமர்சித்திருந்தது. இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார். தில்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2 முன்னாள் ராணுவ தளபதிகள், கடந்த 2008 மற்றும் 2014ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட துல்லியத் தாக்குதல் நடவடிக்கை (ஆபரேஷன் ஜிஞ்சர்) குறித்த ஆதாரம் ஊடகத்திலும் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது அரசின் ஆட்சிக்காலத்தில் ஒருபோதும் பின்வாங்கியது இல்லை. துல்லியத் தாக்குதல் குறித்து அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அதற்கு அவர் சொந்தம் கொண்டாடியதும் இல்லை.