பானி புயலுக்கு மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அந்த மாநிலத்தில் 10,000 தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விவசாயப் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஒடிஸாவை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்துக்குள் பானி புயல் சென்றது. அந்தப் புயல், மேற்கு மிதினாப்பூரில் உள்ள காரக்பூர் வழியாக அதிகாலை 12.30 மணிக்கு மேற்கு வங்கத்துக்குள் புகுந்தது. அதன்பின்னர் ஹூக்ளியிலுள்ள ஆரம்பாக், நாடியா, முர்ஷிதாபாத் வழியாக அண்டை நாடான வங்கதேசத்துக்கு சென்றது.
மேற்கு வங்க மாநிலத்துக்குள் நுழைவதற்கு முன்பு வலுவிழந்ததால், புயலின் வேகம் தீவிரமாக இல்லை. கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலேயே காற்று வீசியது. சில இடங்களில் மட்டும் லேசான பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 800 மண் வீடுகள் லேசாக சேதமடைந்தன. 12 மண் வீடுகள் முழுவதும் இடிந்து விட்டன.
முன்னெச்சரிக்கையாக மின்சேவையும், விமானம் மற்றும் ரயில் சேவையும் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டிருந்தன. புயல் வங்கதேச நாட்டுக்குள் சென்றதும், விமானம் மற்றும் ரயில் சேவை சனிக்கிழமை காலை மீண்டும் தொடங்கப்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயங்கத் தொடங்கின. துறைமுகங்களிலும் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
5 பேர் காயம்: கொல்கத்தாவின் மத்திய பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, புயல் நிலவரத்தை பார்வையிட மேற்கு மிதினாப்பூரில் தங்கி விட்டார். அவர் கூறுகையில், "புயலையொட்டி முன்னெச்சரிக்கையாக 42,000 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
ஆந்திரத்தில்....: ஆந்திரத்தில் கடலோர மாவட்டங்கள் பானி புயலால் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒடிஸா எல்லையில் இருக்கும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 958 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10,000 தென்னை மரங்கள், 218 செல்லிடப் பேசி கோபுரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. 304 வீடுகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக 15,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.