அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறிய ராஜீவ் சக்சேனா, வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி சிறப்பு நீதிமன்றம் மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மருத்துவ காரணங்களுக்காக எய்ம்ஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராஜீவ் சக்சேனாவுக்கு ஏற்கெனவே ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராஜீவ் சக்சேனா மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல அனுமதி வேண்டி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை சிறப்பு நீதிமன்ற சிபிஐ நீதிபதி அரவிந்த் குமார் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் சக்சேனாவின் மனு மீதான விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
சக்சேனா ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி மனு அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு ஏற்கெனவே நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3,600 கோடி மதிப்புக்கு ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா மீது அமலாகத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறினார். சக்சேனா துபாயில் உள்ள யுஹெச்ஒய் சக்சேனா மற்றும் மேட்ரிக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார்.
இதனிடையே, ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான கௌதம் கேதானின் மனைவி ரீது கேதானுக்கு கருப்பு பண மோசடி வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.