
மக்களவைக்கு 5-ஆவது கட்டமாக, 51 மக்களவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 6) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ராஜ்நாத் சிங் ராத்தோர், ஸ்மிருதி இரானி, ஜெயந்த் சின்ஹா, அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்த தேர்தலில் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. இதுவரை மொத்தம் 374 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் உள்பட 7 மாநிலங்களில் 5-ஆம் கட்ட தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
இதில், பிகாரில் 5 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள் என மொத்தம் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதிகளில், 4.63 கோடி ஆண் வாக்காளர்கள், 4.12 கோடி பெண் வாக்காளர்கள், 2,214 திருநங்கைகள் என மொத்தம் 8 கோடியே 75 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.