5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்

மக்களவைக்கு 5-ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்
5-ஆம் கட்ட தேர்தல்: 51 தொகுதிகளில் 674 வேட்பாளர்கள்

மக்களவைக்கு 5-ஆம் கட்டமாக, 51 தொகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறும் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்பட மொத்தம் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 இந்த தேர்தலையொட்டி, 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் மொத்தம் 96,088 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 உ.பி.யில்..: உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 182 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ராகுல் காந்தியை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். லக்னெü தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில், சமாஜவாதி 7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கான கடைசி தினமான சனிக்கிழமை, அமேதி நகரில் ஸ்மிருதி இரானியை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார்.
 பிகாரில்...: பிகாரில் 5 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 82 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், முசாஃபர்பூர் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியும், சீதாமரி தொகுதியில் பாஜக எம்.பி. ஹேமமாலினியும் பிரசாரம் மேற்கொண்டனர்.
 ம.பி.யில்...: மத்தியப் பிரதேசத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 110 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பிரசாரத்துக்கு கடைசி நாளான சனிக்கிழமை, ஹோஷன்காபாத் நகரில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். திமார்கர், கஜுராஹோ, ரேவா ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அமித் ஷா கலந்து கொண்டார்.
 மேற்கு வங்கத்தில்..: மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 83 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக, திரிணமூல், மார்க்சிஸ்ட் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
 பானி புயல் சீற்றத்தால், மேற்கு வங்கத்தில் பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் ஏற்கெனவே பிரசாரத்தை முடித்து விட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
 ஜம்மு-காஷ்மீரில்..: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லடாக், அனந்த்நாக் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளில், 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், அனந்த்நாக் தொகுதியில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
 ஜார்க்கண்டில்...: ஜார்க்கண்டில் 4 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 61 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com