பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

"பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்குவோம்' என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான குரலில் காங்கிரஸ் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

"பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்குவோம்' என்று பாகிஸ்தானுக்கு ஆதரவான குரலில் காங்கிரஸ் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 பிகார் மாநிலம் வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தொடங்கியபோது, எதிர்க்கட்சிகளின் "மகா கூட்டணி', என் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியது. மக்களிடையே இது எடுபடாததால், தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. மக்களவைக்கான நான்குகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்தைக் குற்றஞ்சாட்டத் தொடங்கிவிட்டன. இவை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், நொண்டி சாக்கு கூறுவதைப் போலவும், கிரிக்கெட் போட்டியில் "கிளீன் போல்டு' ஆன பேட்ஸ்மேன் ஒருவர், ஆட்ட நடுவரைக் குறைகூறுவது போலவும் உள்ளன.
 குடும்ப அரசியல்: ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், "பாதுகாப்புப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை நீக்குவோம்' என்று காங்கிரஸ் பேசி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவான இந்தக் குரல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளமும் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. அக்கட்சிகளுக்குத் தொலைநோக்குப் பார்வை என்று எதுவும் கிடையாது. மக்களின் சேவகர்களாக அவர்கள் தங்களை நினைக்கவில்லை. மாறாக, ஜனநாயகத்தின் ராஜாக்களாகத் தங்களை நினைத்துக் கொள்கின்றனர்.
 பொய் வாக்குறுதிகள்: "நியாய்' திட்டம் மூலம் ஏழ்மையை ஒழிக்கப் போவதாக காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. இதே போன்ற வாக்குறுதியைக் கடந்த 2009-ஆம் ஆண்டுத் தேர்தலிலும் அவர்கள் அளித்தனர். ஆனால், அத்திட்டத்தின் ஒருபகுதியை மட்டுமே அவர்கள் நிறைவேற்றினர். அத்திட்டத்தின் பலன் மக்களைச் சென்று சேரவில்லை. நீண்ட காலத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளைக் கவனமாக ஆராயுங்கள். அரசுக் கருவூலத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காகவே இதுபோன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துவருவதைக் காணமுடியும் என்று அவர் தெரிவித்தார்.
 இந்தப் பிரசாரக் கூட்டத்தில், பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com