ரஃபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை: மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

"உச்சநீதிமன்றம் வழங்கிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு தெளிவாகவும், அழுத்தந்திருத்தமாகவும் உள்ளது

"உச்சநீதிமன்றம் வழங்கிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பு தெளிவாகவும், அழுத்தந்திருத்தமாகவும் உள்ளது; அதை மறுஆய்வு செய்யக் கோருவதற்கு அடிப்படை முகாந்திரங்கள் எதுவும் இல்லை' என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
 பிரான்ஸின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், "ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை' என்று கூறி, கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.
 இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்புத் துறையின் ரகசிய ஆவணங்களை, ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, அந்த ரகசிய ஆவணங்கள் தொடர்பான ஆங்கில நாளிதழின் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் செüரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 இவை தவிர ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் வழக்குரைஞர் வினீத் தந்தா ஆகியோர் சார்பிலும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில், மத்திய அரசு தெரிவித்த முதல்கட்ட ஆட்சேபங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கடந்த மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து விதமான ஆவணங்கள் அடிப்படையிலும், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.
 அடுத்த வாரம் விசாரணை: ரஃபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகப் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சனிக்கிழமை தாக்கல் செய்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
 இந்த விவகாரத்தில், கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தெளிவாகவும், அழுத்தந்திருத்தமாகவும் உள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையிலும், போர் விமானங்களின் விலை தொடர்பான விவகாரத்திலும், ஒப்பந்தத்துக்கான நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததிலும் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிடவும் மறுப்பு தெரிவித்திருந்தது.
 ஆனால், நாளிதழில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ரஃபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த ரகசிய ஆவணங்களைச் சட்டத்துக்குப் புறம்பான வழியில் பெற்று, குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க முடியாது.
 அடிப்படை முகாந்திரங்கள் இல்லை: ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் தலைமை கணக்குத் தணிக்கையாளரிடம் (சிஏஜி) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்தபின்னர், அது குறித்தான விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். எனவே, ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோருவதற்கு அடிப்படை முகாந்திரங்கள் எதுவும் இல்லை.
 முறைகேடான வழியில் பெற்று வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்களும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசின் அணு ஆயுதங்கள், விண்வெளி ஆய்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான ரகசிய ஆவணங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவேளை இந்த ஆவணங்களை சிலர் திருடி, அதை ஊடகங்களிலோ அல்லது இணையத்திலோ வெளியிட்டுவிட்டால், அவற்றை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com