

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசும், பயங்கரவாதிகளும் சண்டை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
ரம்ஜான் மாதம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த மாதம், பிரார்த்தனைக்கான மாதம். மக்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இந்த நேரத்தில், பயங்கரவாதிகளும், பாதுகாப்பு படையினரும் சண்டையிட்டு கொண்டிருப்பது அவர்களுக்கு தொந்தரவளிக்கும்.
முஸ்லிம் மக்களின் அமைதிக்காக, கடந்த ஆண்டு அறிவித்ததை போல, இந்த ஆண்டும் சண்டை நிறுத்தத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் என்கவுன்ட்டர்களை பாதுகாப்பு படையினர் நிறுத்த வேண்டும்.
அதுபோல, பயங்கரவாதிகளும், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயை பின்பற்றி ஆட்சி நடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறையும் கூறுகிறார். ஒவ்வோர் ஆண்டும் ரம்ஜான் மாதம் தொடங்கும்போது, முஸ்லிம் மக்களின் அமைதிக்காக, காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை வாஜ்பாய் அறிவிப்பார். அதுபோல மோடியும் அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், ஜம்மு-காஷ்மீரை போர்க்களமாக மத்திய அரசு மாற்றியுள்ளது. கல்வீசுதல் குற்றத்துக்காக, இளைஞர்கள் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டிய வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை போக்குவரத்தை அவ்வப்போது முடக்குகின்றனர். தேர்தல் முடியும் வரை இத்தகைய நிலையை நீடிக்க மத்திய அரசு நினைக்கிறது என்றும் மெஹபூபா குற்றம்சாட்டினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, " இது போன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்' என்றார் மெஹபூபா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.