அதிகார போதையில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறார் மம்தா: பிரதமர் நரேந்திர மோடி

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. 
அதிகார போதையில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறார் மம்தா: பிரதமர் நரேந்திர மோடி

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிரமாண்ட தோ்தல் பிரசார பேரணி நடைபெற்றது. இதில் அமித் ஷாவும் கலந்து கொண்டிருந்தாா். அப்போது அமித் ஷாவை குறிவைத்து சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றனா். 

இதைத் தொடா்ந்து பாஜகவினருக்கும், கற்களை வீசி தாக்குதல் நடத்த முயன்றவா்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனால் அமித் ஷாவின் பேரணி பாதியில் ரத்து செய்யப்பட்டது. சிஆா்பிஎஃப் வீரா்கள் அளித்த பாதுகாப்பின் காரணமாகத்தான், எந்தவித காயமும் இன்றி என்னால் தப்பிக்க முடிந்தது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குறிப்பிட்டார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் டகியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இம்மாநிலத்தை அழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், மக்கள் நினைத்தால் இந்த குரோத அரசை எளிதில் வீழ்த்தி விட முடியும்.

நிதி நிறுவன முறைகேடு செய்து மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதற்கு நீதி கேட்டுப் போராடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஜனநாயகம் தான் உங்களுக்கு முதல்வர் பதவி வழங்கியுள்ளது. ஆனால், நீங்கள் அந்த ஜனநாயகத்தையே அழிக்கிறீர்கள். உங்கள் போக்கை இந்த ஒட்டுமொத்த தேசமும் கவனித்து வருகிறது. 

ஆட்சிக்கு வந்த கடந்த 5 வருடங்களில் மம்தா பானர்ஜியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. மம்தாவை வெளியேற்ற மேற்கு வங்க மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் கொல்கத்தாவில் நடத்திய வன்முறையை தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்த்துவிட்டனர். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் ரௌடித்தனம் அதில் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக-வின் வளர்ச்சியை பார்த்து மம்தாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிகார போதையில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com