
ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த தலைவராக, ஐ.நா.வுக்கான நைஜீரியத் தூதர் திஜானி முகமது-பண்டே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை செயல்வடிவில் எதிர்க்கும் அமைப்பாக ஐ.நா. பொதுச் சபையை வலுப்படுத்த வேண்டும் என்று அவரிடம் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அக்பருதீன் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்கு, நைஜீரியத் தூதர் திஜானி முகமது-பண்டேவை தலைவராக நியமிக்கும் உறுப்பு நாடுகளின் முயற்சிக்கு, இந்தியா தனது ஆதரவை வழங்குகிறது. ஆப்பிரிக்காவின் மைந்தரான திஜானி, இந்தியாவின் உற்ற நண்பராவார் என்று தனது சுட்டுரைப் பதிவில் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அமைதி, வளர்ச்சி, மனித உரிமைகளுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை ஐ.நா. கொண்டுள்ளது. எனினும், பயங்கரவாதச் செயல்களுக்கு கண்டனம் மட்டும் தெரிவிக்கும் அமைப்பாக இல்லாமல், செயல்வடிவிலான முடிவுகளை எடுக்கும் அமைப்பாக ஐ.நா. பொதுச் சபையை திஜானி முகமது-பண்டே வலுப்படுத்த வேண்டும் என்று சையது அக்பருதீன் தெரிவித்தார்.