கொல்கத்தா: அமித் ஷா பேரணியில் வன்முறை: போலீஸ் தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில்
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட பேரணி.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட பேரணி.


மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், பேரணியை நோக்கி கற்களை வீசினர். இதில் காயம் ஏதுமின்றி அமித் ஷா தப்பினார். இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையாளர்களைக் கலைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொல்கத்தாவில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவில் பாஜக சார்பில் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. அப்போது வித்யாசாகர் கல்லூரி விடுதியில் மறைந்திருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர், பேரணியில் பங்கேற்றவர்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசினர். 
இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் அவர்களை விரட்டத் தொடங்கினர். இதில் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 
அப்பகுதியில் இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
கல்வீச்சில் அமித் ஷாவுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. போலீஸார் அவரை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால், பேரணி பாதியிலேயே முடிவுக்கு வந்தது. இந்த வன்முறையால் கொல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
முன்னதாக, கொல்கத்தா பல்கலைக்கழக வாசலில் குவிந்திருந்த இடதுசாரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு மாணவர்கள், அமித் ஷாவுக்கு எதிரான வாசக அட்டைகளையும், கருப்புக் கொடிகளையும் காட்ட முயன்றனர். அந்த இடத்தை பேரணி கடந்தபோதும் அப்பகுதியில் கடுமையான தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஹிந்தி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அமித் ஷா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெளடிகள் என்னைத் தாக்க முயன்றனர். 
எனக்கு எதிராக மம்தா பானர்ஜி திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளார். ஆனால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். 
வன்முறையாளர்களைத் தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பேரணியை திட்டமிட்டபடி நிறைவு செய்ய அனுமதிக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com