
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளத்தில் ஜுன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆண்டுதோறும் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு 3 நாள்கள் தாமதமாக ஜுன் 4-ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் பருவமழை, வழக்கமான அளவை விட குறைவாக பொழியும்.
அந்தமான்-நிகோபார் தீவில் வரும் 22-ஆம் தேதி பருவமழை தொடங்கலாம். அது இரண்டு நாள்கள் முன்பாக அல்லது பின்னர் தொடங்க வாய்ப்புண்டு. இந்திய தீபகற்ப பகுதியில் பருவமழை மெதுவாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் வழக்கமான மழையை விட குறைவாகவே மழை பொழியும்.
வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்களை விட குறைவான அளவே மழைப்பொழிவு இருக்கும். நீண்ட கால சராசரி மழை அளவில், 92 சதவீத மழை வடகிழக்கு மற்றும் கிழக்கிந்திய பகுதிகளில் பொழியும். இது வழக்கமான மழையை விட குறைவாகும்.
வடமேற்கு இந்திய பகுதிகளில் நீண்ட கால சராசரி மழை அளவில் 96 சதவீதம் மழைப்பொழிவு இருக்கும். ஆந்திரத்தின் ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் உள்பகுதிகளில் மிக மிக குறைந்த அளவே மழைப்பொழிவுக்கு வாய்ப்புண்டு. கேரளம் மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.