
நல்லுறவை விரும்பினால், பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் முடிவுகட்ட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா நிபந்தனை விதித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவ மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு அமைவது அவசியம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதிலிருந்து பிரதமர் மோடியின் ரசிகராக இம்ரான் கான் மாறிவிட்டது தெரிகிறது.
மத்தியில் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைய வேண்டும் என்றும், இந்தியாவுடன் சுமுக உறவு ஏற்பட வேண்டும் என்றும் இம்ரான் கான் உண்மையில் விரும்பினால், பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்று அறிவிக்க வேண்டும். மேலும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவதற்கு இம்ரான் கான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உதவி தேவைப்பட்டால், அதை அளிக்க இந்தியா தயாராக உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு பாகிஸ்தானிடம் இருந்து வந்தால், மோடியின் உண்மையான ரசிகர் இம்ரான் கான், இந்தியாவுடன் நல்லுறவுகளை விரும்புகிறார் என்று இந்தியா கருதும்.
கடந்த 2004ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதத்துக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிட அப்போதைய அதிபர் ஜெனரல் முஷாரஃப் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய தவறாகும்.
கடந்த 2014ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற தனது பதவியேற்புக்கு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததும், பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு திடீர் பயணமாக மோடி சென்றதும் சரியான நடவடிக்கைதான். இந்த முடிவுகளால், ஏதேனும் பயன் கிடைக்கிறதா என்று இந்தியா பரிசோதித்து பார்த்தது. ஆனால் எந்த வகையிலும் அதற்கு பயன் கிடைக்கவில்லை.
மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில், பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படுமா? எனக் கேட்கிறீர்கள். பதவியேற்புக்கு யாருக்கு அழைப்பு விடுக்கப்படும், யாருக்கு அழைப்பு விடுக்கப்பட மாட்டாது எனத் தற்போதே தெரிவிக்க முடியாது.
பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இத்தாலி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று கேள்வியெழுப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.