
பதர்வா/ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பதர்வா பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நீடிப்பதால் 3ஆவது நாளாக அந்தப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தது.
பசுப் பாதுகாவலர்கள் நயீம் ஷா கொலையின் பின்னணியில் இருப்பதாக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தோடா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தோடா மாவட்ட காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் ஷபீர் அகமது மாலிக் கூறுகையில், "காவல் துறைக் கண்காணிப்பாளர் ராஜ் சிங் கௌரியா தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த பகுதியில் புதிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொலை செய்ய
சிறிய ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுவரை 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
இதனிடையே, தோடா காவல் துறை துணை ஆணையர் சாகர் டய்ஃபோட் கூறுகையில், "கச்சி நல்தி கிராமத்தில் நடந்த வன்முறையில் உள்ளூர்வாசிகள் இல்லாமல் வெளியூரைச் சேர்ந்த சிலர் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 3ஆவது நாளாக சனிக்கிழமையும் நீட்டிக்கப்பட்டது. சிஆர்பிஎஃப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன' என்றார்.