
பெங்களூரு: கர்நாடகத்தில் குந்தகோல், சின்சோளி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தார்வாட் மாவட்டத்தின் குந்தகோல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சி.எஸ்.சிவள்ளி, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இவர் எதிர்பாராதவிதமாக மார்ச் 22-இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதேபோல, கலபுர்கி மாவட்டத்தின் சின்சோளி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆக இருந்த உமேஷ்ஜாதவ், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை மார்ச் 4-இல் ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து, கலபுர்கி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து பாஜக வேட்பாளராக உமேஷ்ஜாதவ் போட்டியிடுகிறார்.
இதன் காரணமாக காலியாக உள்ள குந்தகோல், சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது.இந்த இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 3,83,313 பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் 1,96,548, பெண்கள் 1,86,744, மூன்றாம் பாலினத்தார் 21, அரசு ஊழியர்(அஞ்சல் வழிவாக்காளர்கள்) 138 பேர் அடங்குவர். குந்தகோல் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,89,444 வாக்காளர்களும்(ஆண்கள்-97,501, பெண்கள்-91,938, மூன்றாம் பாலினத்தவர்-5), சின்சோளி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,93,869 வாக்காளர்களும்(ஆண்கள்-99,047, பெண்கள்-94,806, மூன்றாம் பாலினத்தவர்-16) உள்ளனர்.
வேட்பாளர்கள்: இரு தொகுதிகளிலும் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். சின்சோளி தொகுதியில் 15 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 17 வேட்பாளர்களும், குந்தகோல் தொகுதியில் 6 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
சின்சோளி தொகுதியில் உமேஷ்ஜாதவின் மகன் அவினாஷ் ஜாதவ், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக சுபாஷ் ராத்தோட், பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளராக கெளதம் பொம்னள்ளி, இந்துஸ்தான் ஜனதாகட்சி வேட்பாளராக ஸ்ரீவெங்கடேஷ்வரா மகாசுவாமிகள், பகுஜன்முக்தி கட்சி வேட்பாளராக மாருதி கஞ்சகிரி, சர்வ ஜனதா கட்சி வேட்பாளராக விஜய்ஜாதவ், சுயேச்சை வேட்பாளர்களாக கே.தீபா, தொட்டமணி நாகேந்திரப்பா, பிரவீண்குமார் பெல்லுந்தகி, பாக்யா சந்தோஷ்தல்வார், மல்லிகார்ஜுன்கஜாரே, ரமேஷ்பீம்சிங்சவாண், போவிவிஷ்வேஸ்வரையா, சாம்ராவ் கங்காராம், சாம்ராவ் சந்திரப்பா தெகல்மாடி, சாம்ராவ் மல்லேஷப்பா ஹேரூர், ஹனுமந்த ராமநாடக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். குந்தகோல் தொகுதியில் மறைந்த அமைச்சர் சிவள்ளியின் மனைவி குசுமவதி காங்கிரஸ் வேட்பாளராகவும், சிக்கன்னகெளடர் பாஜக வேட்பாளராகவும் களத்தில் உள்ளனர்.
சுயேச்சை வேட்பாளர்களாக பண்டிவாட் ஈஸ்வரப்பா ஷெட்டெப்பா, துலசப்பா கரியப்பா தாசர், ராஜு அனந்த்ச நாயக்வாடி, கோனி ஷைலாசுரேஷ், சித்தரப்ப சத்தியப்பா கோடி, சோமண்ணா சென்னபசப்பா மேட்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மஜத ஆதரவு அளித்துள்ளது.
எனவே, இரு தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது.