
கேதார்நாத்தில் வழிபட்டதை தான் அதிர்ஷ்டமாக நினைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் அருகே உள்ள குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி காலை குகையை விட்டு வெளியே வந்தார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி கேதார்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேதார்நாத் பயணத்தை முடித்ததும் இன்று பத்ரிநாத் செல்லும் பிரதமர் நரேந்தி மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதியம் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தியானத்துக்குப் பிறகு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது. கேதார்நாத் வளர்ச்சிக்காக நான் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
காணொலிக் காட்சி மூலம் எனக்கான தகவல்களை நான் சேகரித்து வருகிறேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. எனக்காக எதையும் கேட்டு நான் கோயிலுக்கு செல்வது இல்லை. நாட்டில் நடப்பதில் இருந்து விலகி ஆன்மீக பயணமாக உத்தரகண்ட் வந்துள்ளேன் என்றார்.