
மும்பை: செய்தியாளர்கள் சந்திப்பு விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு மோடி பதிலளிக்கவில்லை. அமித் ஷா மட்டுமே பதிலளித்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டணி கட்சியான சிவசேனை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் கூறியதாவது:
அமித் ஷாவால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு அது. கட்சித் தொண்டர் என்ற வகையிலேயே மோடி அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அதனால்தான் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு அவர் பேட்டி அளித்து கொண்டுதான் உள்ளார்.
தனது உரைகள் மூலம், மக்களுடன் பிரதமர் பேசிக் கொண்டிருக்கிறார். இது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருப்பதைக் காட்டிலும் சிறந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று கருத்து தெரிவிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கருத்துகள், தேர்தல் முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.
மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சஞ்சய் ரௌத்திடம் கேட்கப்பட்டது. ஆனால் அக்கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் மட்டுமே சிவசேனை கவனம் செலுத்துவதாக சஞ்சய் ரௌத் குறிப்பிட்டார்.