
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் பானர்ஜியின் வழக்குரைஞர் சஞ்சய் பாசு கூறியதாவது:
இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மோடிக்கு அபிஷேக் பானர்ஜி அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில், பொய்யான குற்றச்சாட்டுகள் தெரிவித்ததற்காக 36 மணி நேரத்துக்குள் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸ், பிரதமரின் இல்லத்துக்கும், பாஜக தலைமையகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பாஜக பதில்: இந்த நோட்டீஸ் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக கருத்து கூறுகையில், "தேர்தலில் தோல்வி உறுதி என்பதை தெரிந்து கொண்டு, இதுபோன்ற அர்த்தமில்லாத செயலில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.
டைமண்ட் ஹார்பரில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர், மம்தா பானர்ஜியையும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.