மோடி, அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை: முக்தார் அப்பாஸ் நக்வி 

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை எதிர்க்க முடியாததால் அவர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை
மோடி, அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கட்டுக்கதை: முக்தார் அப்பாஸ் நக்வி 
Updated on
1 min read


கொல்கத்தா: பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை எதிர்க்க முடியாததால் அவர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை கூறி வருவதுடன், தனிமனித விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டினார். 
இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: பாஜகவின் மீது ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக கட்டுக்கதைகள் புனையப்பட்டாலும், அதனை மோடியும், அமித் ஷாவும் உடைத்தெறிந்து வருகின்றனர். 
அரசியல் வெறுப்புணர்வின் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட நபர் பிரதமர் மோடிதான். சில சம்பவங்களை மட்டுமே மேற்கோள் காட்டி, "சிறுபான்மையினருக்கு எதிரானவர் மோடி' என்று தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 
உண்மையை கூற வேண்டுமானால், மோடியும், அமித் ஷாவும் தீவிர களப்பணியாளர்கள். அவர்கள் தங்கள் அரசியல் வாழ்க்கையை கிராமங்களில் இருந்தும், மண்டல அளவில் இருந்தும் தான் தொடங்கினார்கள். கடுமையான விமர்சனங்களையும், போராட்டங்களையும் கடந்துதான் இருவரும் இந்த நிலைக்கு உயர்ந்தார்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது. அவர்களே தொடர்ந்து கற்பனை கதைகளையும், தவறான விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். 
கடந்த 2014ஆம் ஆண்டில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நிலையான ஆட்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தித் தந்துள்ளார். கடந்த பொதுத் தேர்தல், மோடியை ஆட்சியில் அமர வைப்பதற்காக நடந்தது. இந்த முறை, அவரது சாதனைகள் மீண்டும் தொடர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். 
மோடியின் ஆட்சியில், சிறுபான்மையின மக்கள் கடும் அச்சத்துடனும், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாகி 
வருவதாக திட்டமிட்டு, வேண்டுமென்றே  தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 
இந்த ஆட்சியை பொருத்தவரை அனைத்து தரப்பினருக்கும், பாகுபாடின்றி வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு இடத்திலும் மத மோதல்கள் ஏற்படாமல் மக்களை பாதுகாத்து வருகிறோம். 
காஷ்மீர் போன்ற மிகச்சில இடங்களைத் தவிர, பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறவில்லை. அவ்வாறு தாக்குதல் நடைபெற்ற இடங்களிலும், பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது. 
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியின்போது, 15 நாள்களுக்கு ஒருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்களும், அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏராளமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். ஆனால், இதுபோன்ற செயல்கள் எதுவும் கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் நடைபெறவில்லை. 
மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அந்த மாநில அரசு, தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாஜகவினரை தாக்கிய திரிணமூல் காங்கிரûஸ சேர்ந்த ஒருவரைக் கூட அந்த மாநில அரசு கைது செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com