
பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணத்துக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் குறித்து காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் மோடி நேற்று (சனிக்கிழமை) உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றிருந்தார். அவர் அங்கு சுமார் 18 மணி நேரம் வரை தியானம் மேற்கொண்டார். இதையடுத்து, ஊடகங்களில் பிரதமர் மோடி தியானம் செய்த புகைப்படங்கள் உள்ளிட்ட செய்திகள் வரத் தொடங்கின. குறிப்பாக சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி தியானம் செய்த புகைப்படங்கள் வைரலானது.
இதற்கிடையில், மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 59 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கேதார்நாத் பயணத்துக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி பிரதீப் பட்டாச்சார்யா தெரிவிக்கையில், "மோடியின் பயணத்துக்கு கொடுக்கப்படும் ஊடக வெளிச்சத்தை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தெலுங்கு தேசம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
"பிரதமர் மோடி பத்ரிநாத்துக்கும், கேதார்நாத்துக்கும் அலுவல் ரீதியிலான பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் அனைத்து ஊடகங்களிலும் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்."
திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அவர்கள், "கேதார்நாத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும். இது நெறிமுறையற்ற செயல்" என்று தெரிவித்துள்ளனர்.