
உத்தரப் பிரதேசத்தில் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அத்தொகுதிக்கு ஸ்மிருதி இரானி அடிக்கடி சுற்றுப்பயணம் செய்தார். கடந்த 5 ஆண்டுகளில் அத்தொகுதியில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை ஸ்மிருதி கேட்டார்.
இது பாஜக மீதும், ஸ்மிருதி இரானி மீதும் அமேதியில் உள்ள கிராம மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நம்பிக்கை, மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானிக்கான வாக்குகளாக மாறி, அவருக்கு வெற்றியையும், ராகுல் காந்திக்கு தோல்வியையும் தந்தது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை வீழ்த்த ஸ்மிருதி இரானியின் உதவியாளராக இருந்தவர் சுரேந்திர சிங்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்த அவரை, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவரை உடனே லக்கெனவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது