
அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசா சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அன்சர் காஜ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகிர் மூசாவை பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனர். இதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றநிலை காணப்பட்டதால், சனிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக நோஹட்டா, ரைனாவாரி, கான்யார் முதலான பகுதிகளில் மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை சனிக்கிழமை மூடப்பட்டிருந்தன. இணையதளச் சேவையும் முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. பாராமுல்லா-பனிஹால் இடையேயான ரயில் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, காஷ்மீர் பகுதியில் ஹூரியத் அமைப்பு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.
மூசா சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ""மூசாவை சரணடையும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், அதற்குப் பணியாமல் பாதுகாப்புப் படையினர் மீது கையெறி குண்டுகளை அவர் வீசத் தொடங்கினார். அதையடுத்தே அவர் இருந்த இடம் நோக்கித் துப்பாக்கியால் சுட்டோம்'' என்றார்.