
கேரளத்தில் இருந்து படகுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் லட்சத் தீவுகளுக்குப் புறப்பட்டு வந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து, கேரளத்தின் கடலோரப் பகுதியிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 15 பேர், இலங்கையில் இருந்து லட்சத் தீவுகளுக்கு படகுகளில் புறப்பட்டு வந்ததாக, கேரள காவல் துறைக்கு மத்திய உளவுத் துறை கடந்த 23-ஆம் தேதி தகவல் கொடுத்தது. அப்போதிருந்து, கேரள காவல் துறை எச்சரிக்கையுடன் உள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர், பிடிஐ செய்தியாளருக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த முறை, எத்தனை பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்பது குறித்து துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால், உஷார் நிலையில் இருக்குமாறு கேரள கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், கடலோர மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று 8 இடங்களில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு கேரளத்தில் சதித் திட்டம் தீட்டியது தேசியப் புலனாய்பு அமைப்பினரின் விசாரணையில் தெரியவந்ததால், அதன் பிறகு மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.