
1942 - 1947 காலகட்டத்தைப் போல் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பாஜக சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,
"1942 - 1947 காலகட்டத்தைப் போல் அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. உலகளவில் இந்தியா சரியான இடத்தை அடைவதற்கான காலம் தான் அடுத்த 5 ஆண்டுகள். கடந்த காலங்களில் இந்தியா அந்த இடத்தை அடைந்திருக்கிறது. உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இந்தியா மீண்டும் அடையும்.
ஒருபுறம் கடமை, மறுபுறம் சூரத்தில் உயிரிழந்தவர்களின் சோகம் என நேற்று வரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன்.
இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளுடைய குடும்பத்தினரின் துயரத்தை வார்த்தைகளால் துடைத்துவிட முடியாது.
அதேசமயம், குஜராத்தில் உள்ள மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தாயிடம் ஆசி பெற வேண்டிய கடமையும் உள்ளது" என்றார்.
இதைத் தொடர்ந்து காந்தி நகரில் உள்ள இல்லத்துக்குச் சென்று தனது தாயிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.