தேர்தல் வெற்றிக்காக மனச்சாட்சியை விற்கக் கூடாது: கௌதம் கம்பீர்

தேர்தல் வெற்றிக்காக அற்பமாக மனச்சாட்சியை விற்கக் கூடாது என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். 
தேர்தல் வெற்றிக்காக மனச்சாட்சியை விற்கக் கூடாது: கௌதம் கம்பீர்

தேர்தல் வெற்றிக்காக அற்பமாக மனச்சாட்சியை விற்கக் கூடாது என்று கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். 

பதினேழாவது மக்களவைத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதன் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.  இதில் தலைநகர் தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்நிலையில், வெற்றி பெற்ற பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  அப்போது கௌதம் கம்பீர் கூறியதாவது: கிழக்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை மிக மோசமான வகையில் விமர்சிக்கும் துண்டுப் பிரசுரங்களை நான் விநியோகித்தேன் என்று முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அதிஷி ஆகியோர் தங்களது மனச்சாட்சிக்கு விரோதமாகக் குற்றம்சாட்டிப் பேசினர்.

பெண்களை மதிக்கும், பெண்களைப் போற்றும் குடும்பத்தில் பிறந்தவன் நான்.  பெண்களை இழிவாக விமர்சிக்கும் துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பதை என்னால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால், நான் அதைச் செய்ததாக ஆம் ஆத்மித் தலைவர்கள் வெறும் தேர்தல் வெற்றிக்காக என் மீது அபாண்டமாகப் பழி கூறினர்.  தேர்தல் வெற்றிகள் இன்றுவரும் நாளை போகும். ஆனால், தேர்தல் ஆதாயத்துக்காக மனச்சாட்சிக்கு விரோதமாக எப்படி நடந்துகொள்கின்றனர்? மனச்சாட்சியை இழப்பவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுகின்றனர் என்றார் கொதம் கம்பீர்.  வடகிழக்கு தில்லி எம்.பி. மனோஜ் திவாரி கூறுகையில், பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக்கொண்ட நேர்மறையான சிந்தனைகளை தேர்தல் பிரசாரத்தின்போது, மக்களிடம்  பாஜக தொண்டர்கள் எடுத்துச்சென்று எங்களை வெற்றிபெற செய்துள்ளனர். 

மூன்று முறை தொடர்ந்து தில்லியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடுவது தொடர்பாக முதலில் சஞ்சலப்பட்டேன். ஆனால், நான்  நிச்சயமாக வெற்றிபெறுவேன் என்று கட்சித் தலைவர் அமித் ஷா எனக்கு நம்பிக்கையூட்டினார்' என்றார்.  மேற்கு தில்லி எம்.பி. பர்வேஷ் வர்மா கூறுகையில், மக்கள் பாஜக வேட்பாளர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை' என்றார்.  சாந்தினி சௌக் எம்.பி. ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தத் தேர்தலின் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு தில்லி மக்கள் முடிவுரை எழுதியுள்ளனர். மேலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்து ஆம் ஆத்மி கட்சி காணாமல் போகும்' என்றார்.

வடமேற்கு தில்லி எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் கூறுகையில், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற கடுமையாக உழைப்பேன்' என்றார்.  இந்தச் செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், தெற்கு தில்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, புதுதில்லி எம்.பி. மீனாட்சி லேகி ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com