

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சி தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு குஜராத் மாநில பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெறுகிறது.
இது தொடர்பாக, மாநில பாஜக தலைவர் ஜிது வாஹனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடியும் அமித் ஷாவும் முதன் முறையாகத் தங்களது சொந்த மாநிலத்துக்கு வருகை தர உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆமதாபாத் விமான நிலையம் வந்தடையும் அவர்கள், வல்லபபாய் படேலின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
பின்னர் கான்பூரிலுள்ள பாஜக கட்சி அலுவலகத்துக்கு அவர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் இருவரையும் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். கட்சி அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஜே.பி.செளக் மைதானத்தில் அவர்கள் இருவருக்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதையடுத்து, கட்சித் தொண்டர்களிடையே அவர்கள் உரையாற்ற உள்ளனர் என்று வாஹனி தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயாரிடம் வாழ்த்து: ஞாயிற்றுக்கிழமை குஜராத் செல்லும் பிரதமர் மோடி, தனது தாயாரைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "என் தாயாரிடம் ஆசி பெறுவதற்காக குஜராத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பயணம் மேற்கொள்ள உள்ளேன். அதன் பிறகு, என் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, வாராண
சிக்குத் திங்கள்கிழமை செல்ல உள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.