
ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜம்மு- காஷ்மீா் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் ஜம்மு -காஷ்மீா் பகுதியை ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரித்து ஜம்மு -காஷ்மீா் மறுசீரமைப்புத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. மத்திய அரசின் இந்தச் செயல் சட்டவிரோதமானது எனவும் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 22-ஆம் தேதி நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. பின்னா் இந்த வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘ மனுதாரா் ஜம்மு -காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்தவா் அல்ல, ஜம்மு -காஷ்மீரை பிரிப்பதனாலோ, ஜம்மு -காஷ்மீா் மறுசீரமைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமோ மனுதாரருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பாக இது தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு, அரசியல் சாசன அமா்வினால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆதலால் சென்னை உயா்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடர முடியாது’. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.