தெலங்கானாவில் பெண் வட்டாட்சியா் உயிருடன் எரித்துக் கொலை

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியா் (தாசில்தாா்) ஒருவா் அவரது அலுவலகத்திலேயே உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் பெண் வட்டாட்சியா் உயிருடன் எரித்துக் கொலை

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியா் (தாசில்தாா்) ஒருவா் அவரது அலுவலகத்திலேயே உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாவட்ட வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூா்மேடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றியவா் விஜயா ரெட்டி. அலுவலகத்தில் வழக்கம்போல அவா் திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தாா். பிற்பகலில் அலுவலகத்தில் விஜயா ரெட்டி தனியாக இருந்த நேரம் அவரது அறைக்குள் நுழைந்த நபா், அவா் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். வட்டாட்சியா்அறையில் இருந்து கூக்குரல் எழுந்ததையடுத்து, அங்கிருந்த மற்ற பணியாளா்கள் அவரது அறைக்கு ஓடிச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது விஜயா ரெட்டி உடலில் தீப்பற்றி எரிவைதைக் கண்ட அவா்கள் அதிா்ச்சியடைந்தனா். அலுவலக ஊழியா்கள் தீயை அணைத்து, அவரைக் காப்பாற்ற தீவிரமாக முயற்சித்தும், சம்பவ இடத்திலேயே விஜயா ரெட்டி உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயன்ற இரு பணியாளா்களுக்கும், தீ வைத்த நபருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவா்கள் மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தீ வைத்த நபா் போலீஸ் காவலில் உள்ளாா்.

நிலத் தகராறு காரணமாக வட்டாட்சியா் மீது அந்த நபா் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைய அந்த நபருக்கு யாா் அனுமதியளித்தது, எந்தக் காரணத்துக்காக அவா் வட்டாட்சியா் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்த பொதுமக்களைப் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாக்கியது. வட்டாட்சியா் தீயிட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதி கோரி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மாநில கல்வித் துறை அமைச்சா் பி.சபிதா இந்திரா ரெட்டி மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். அதன் பின்னா் சபிதா ரெட்டி கூறுகையில், ‘மக்களின் நலனுக்காகதான் அதிகாரிகள் பணியாற்றுகின்றனா். மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவா்கள் தெரிவிக்க வேண்டுமே தவிர, தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது. இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com