
புதுதில்லி: அயோத்தி தீர்ப்பு குறித்த தொலைகாட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கு இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று தீர்ப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தொலைகாட்சி சேனல்களில் வெளியிடும் செய்திகள், விவாதங்களின் போது, விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து தொலைகாட்சி மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.