புதிய இந்தியாவில் பயம், எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை: மோடி பேச்சு

நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
புதிய இந்தியாவில் பயம், எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை: மோடி பேச்சு


புதுதில்லி: உலகிலேயே இந்தியா மட்டும்தான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு வெளியான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அவரது உரையில், எனது மனதில் இருப்பதை நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என நாடு விரும்பியது நிகழ்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக நீடித்த அயோத்தி பிரச்னையில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பு அளித்து முடிவுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மதத்தினரும் அதை வரவேற்ற விதம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூக நல்லிணக்க பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாகவும், சகிப்புத் தன்மையையும் உணர்த்துகிறது.

இதே நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது, அதேபோல் அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நவம்பர் 9 ஆம் தேதியும் வரலாற்றில் நினைவு கூறப்படும். 

இந்த வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் மிகுந்த பொறுமையுடன் கேட்டது. அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒருமித்த தீர்ப்பு வந்தது என்பது நாட்டிற்கும் இன்று மகிழ்ச்சியான நாளாக உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழிதான் இந்த தீர்ப்பு. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகியுள்ளது. வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று என்றும்,  நீதித்துறை வரலாற்றில் இந்த நாள் தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய நாள். நவம்பர் 9 வரலாற்றில் பொறிக்கப்படும். 'புதிய இந்தியாவில்' பயம், கசப்புணர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை.

அயோத்தி தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. அயோத்தி தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. 

இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இன்றைய தினம் சிறந்த உதாரணம். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம் என்றவர், நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உலகிலேயே இந்தியா மட்டும்தான் பெரும் ஜனநாயக நாடாக செயல்பட்டு வருகிறது.

எவ்வளவு கடினமான பிரச்னை என்றாலும் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்பதும், உச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்த தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாதான் நீதியை நிலைநிறுத்தும் நாடாக விளங்கி வருகிறது. 

நமது ஒற்றுமைதான் வளர்ச்சிக்கு உதவும். அனைத்து பிரச்னைகளுக்கும், அரசியலமைப்பு தீர்வு வழங்குகிறது. தற்போது மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. நமது ஜனநாயகம் எவ்வளவு பல பொருந்தியது என்பதை உலகமே கண்டுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com