
அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளது.
இதையொட்டி, அயோத்தி மட்டுமில்லாது நாடு முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அயோத்தி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படா வண்ணம் இருக்க, நாட்டின் பாதுகாப்பு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உளவுத்துறை தலைமை அதிகாரி அரவிந்த் குமார், உள்துறை செயலர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தில்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்தில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...