காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை! - உச்ச நீதிமன்றம்

மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளதாக அயோத்தி வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை! - உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருக்கும் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். 

தீர்ப்பில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், 'ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமையக் கூடாது. பாபர் ஆட்சி காலத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை. இதன் மூலமாக காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் நடுநிலைத் தன்மையுடனே தீர்ப்பு வழங்கப்படுகிறது.

மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.  பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குத்தான் சொந்தம் என்பதை இஸ்லாமியர்கள் நிரூபிக்கவில்லை.

எனவே, வக்பு போர்டு ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பை 3 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலே இருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com