
கோப்புப்படம்
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட பாஜக எப்போதுமே உறுதிபூண்டுள்ளது என பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.
பாபர் மசூதி நில வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கியதை வரவேற்ற பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜக எப்போதுமே உறுதியுடன்தான் இருந்துள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
"நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருந்து, நாட்டின் சமூகம், கலாசாரத்தைக் காத்தமைக்கு பாஜக தலை வணங்குகிறது. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம், இந்திய ஜனநாயகத்தின் வேர் மிகவும் வலிமையாக இருக்கிறது என்பதை இந்த முடிவு தெளிவாக தெரிவிக்கிறது.
பாலம்பூர் தீர்மானத்தில் இருந்து இன்றைய தேதி வரை, இந்த விவகாரத்தில் பாஜக நேர்மறையாகவே செயல்பட்டு, தனது பொறுப்புகள் அனைத்தையுமே செய்துள்ளது. ராமர் கோயில் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீர்வு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது" என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...