பாபர் மசூதி நில வழக்கில் தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இரவு விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.
பாபர் மசூதி நில வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது என்றும், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, அசோக் பூஷண், டிஒய் சந்திரசூட் மற்றும் எஸ்ஏ நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 40 நாட்களாக மேற்கொண்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி விசாரணையை நிறைவு செய்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1,045 பக்க தீர்ப்பை இன்று வழங்கியது.
எனவே, இந்த கடுமையான பணிச் சூழலில் இருந்து அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு சிறிய ஓய்வு அளிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த விருந்து தில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.