புதுதில்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மன நிறைவை தருவதாக பாஜக மூத்த தலைவரான அத்வானி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான எல்.கே. அத்வானி கூறுகையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பை, நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் முழு மனதுடன் வரவேற்கிறேன். இத்தீர்ப்பு எனக்கு நிறைவை தருகிறது.
இந்திய விடுதலை இயக்கத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய இயக்கமான ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு எனது பணிவான பங்களிப்பும் இருக்க கடவுள் வாய்ப்பளித்ததை எண்ணி மனநிறைவு கொள்கிறேன்.
வேற்றுமைகள், கசப்புணர்வுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது என கூறியுள்ளார்.