அயோத்தி வழக்கின் தீர்ப்பும்.. தலைவர்களின் கருத்துகளும்!

தலைவர்கள் அவரவர் கருத்துக்களை டிவிட்டர் மூலமாகவோ, நேரடியாகவும் பதிவு செய்து வருகின்றனர். 
அயோத்தி
அயோத்தி

புது தில்லி: அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அரசியல்  சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும்.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தலைவர்கள் அவரவர் கருத்துக்களை டிவிட்டர் மூலமாகவோ, ஊடகங்கள் வாயிலாகவும், பதிவு செய்து வருகின்றனர். 

பிரதமர் மோடி
அனைத்து தரப்பும் ஏற்கும் விதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 'அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது.  

ராம் பக்தியாக இருந்தாலும், ரஹீம் பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியின் உணர்வை நாம் பலப்படுத்துவது அவசியம். நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைப் பேண வேண்டும்.

நிதின் கட்கரி 
அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். மதிக்க வேண்டும். எந்தவித பிரச்னைக்கும் இடங்கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை பேண வேண்டும், இது அன்பின் காலம் எனவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும். மக்கள் இந்தத் தீர்ப்பை சமநிலையுடன், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவரும் வரவேற்கக் கூடியது. இது சமூக நலனுக்குப் பயனளிக்கும். இந்த விஷயத்தில் இனியும் பிரச்னை செய்யக் கூடாது என நான் கேட்டுக் கொள்கிறேன்.

சன்னி வக்பு வாரியம்
தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் தீர்ப்பு அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் கருதக்கூடாது. தீர்ப்பை வைத்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். தீர்ப்பின் முழு விவரத்தைப் படித்தபின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

அமித்ஷா
ராம ஜென்ம பூமி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒருமனதாக வரவேற்கிறேன். இந்த முடிவை அனைவரும் அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் நீதித்துறை மற்றும் அனைத்து நீதிபதிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த தீர்ப்பு மைல்கல் தீர்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, சிறந்த கலாசாரத்திற்கு மேலும் பலம் தரும்.

மதுரை ஆதினம்
இந்த தீர்ப்பால் இந்துக்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ பெருமையோ, மகிழ்ச்சியோ கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கே.எஸ்.அழகிரி
அவரவர் வணங்கும் கடவுளின் பெயரால், அயோத்தி தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

மு.க ஸ்டாலின் 
அனைத்து தரப்பினரும் அயோத்தி தீர்ப்பை சமமான சிந்தனையுடன் ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு தீர்வை கண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல், மத நல்லிணக்கம் போற்றி அனைவரும் முன்னெடுத்துச் செல்வார்கள்.

நடிகர் ராஜினிகாந்த்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும். மேலும் அனைவரும் இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி பாடுபட வேண்டும் என்றார். 

சுப்பிரமணிய சுவாமி
ராமர் மட்டுமே மீண்டும் கோயில் கட்ட பச்சை விளக்கை எரிய விட்டுள்ளார். மீண்டும் கோயில் கட்டப்பட ராமர் விரும்பி உள்ளார். ஜெய் ஸ்ரீராம் என்று அவர் கூறியுள்ளார். 

பாபா ராம்தேவ்
ராமர் நாட்டுக்கே சொந்தம்...ராமர் கோயில் கட்ட அனைவரும் உதவிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com